உரை என்பது வார்த்தைகள், வாக்கியங்கள், கருத்துகளை
எப்படி ஏற்றத்தாழ்வு, தொனி, பாவனை போன்றவற்றுடன் பேசுதல் ஆகும். பேச்சின் குறிக்கோள்
கேட்பவர்களைப் பேச்சுப் பொருளில் ஆழ்த்திப் பேசியது மாற்றுக் கருத்தாயினும் ஏற்றுக்
கொள்ளுமாறு செய்வதேயாகும். பேச்சாற்றல் வாய்ந்தவர்கள் ஆயிரத்தில் ஒருவர் ஆவர். ஔவையாரே,
‘ஆர்த்தசபை நூற்றொருவர், ஆயிரத்தொன் றாம்புலவர், வார்த்தை பதினாயிரத் தொருவர்’, என்கிறார்.
உரை பொதுவாக மக்கள் நிறைந்த இடங்களில் ஆற்றப்படும். உரையாற்றும் முன் ஒரு சிறந்த சூழ்நிலையோ
அல்லது நிகழ்ச்சியோ அமைந்திருக்க வேண்டும். உரையை ஆற்றுபவர்கள் நிறைய பேர் இருந்தாலும்,
நாம் சிலரின் உரையை மட்டுமே திரும்பி திரும்பி கேட்கிறோம். எடுத்துக்காட்டா, ஐயா திரு
சுகிசிவம் அவர்கள், காதர் இப்ராஹிம் மற்றும் பலர்.
‘
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்துஇனிது
சொல்லுதல்
வல்லார்ப் பெறின் ’,
என்ற
வள்ளுவரின் குறளுக்கேற்ப ஒரு சிறந்த உரையாளர் தனது உரையில் தகவல்களைச் சரிவர பரிமாறினால்
மக்கள் அதனை அவர்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வர் ஒரு சிறந்த உரையில் குறிப்பிட்ட
சில தன்மைகள் கண்டிப்பாக இருத்தல் அவசியம்.
முதலாவதாக, உரையை ஆரம்பிக்கும் முன் அவையடக்கம்
தேவை. அவையடக்கம்ம் குறிப்பிட்ட நேர அளவுக்குள் இருத்தல் அவசியம். தொண தொணவென தலைப்பை
பற்றி சித்தரிக்க கூடாது. பேச்சுத் தொடக்கம் நன்றாக அமையாவிடில், உரையை செவிமடுப்பவர்களுக்கு
உரையை பற்றி நல்லெண்ணம் தோன்றாது. ஆரம்பத்திலேயே, உரையை கேட்பவருக்கு உரை மக்களை ஈர்க்கும்
வண்ணம் அமைய வேண்டும். முறையாக பேச்சு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். இடையில் பேசுவதை
இடையில் மட்டுமே பேச வேண்டும். முடிவு, உரை முடிய போகிறதா என்ற கேள்வியை மக்களிடையே
எழுப்பும் வண்ணம் இருப்பது சிறந்தது மக்களிடம் கேட்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில்
முடிவை சுருக்கமாகக் கூறி முடிக்க வேண்டும். முடிவை பற்றி அதிக நேரம் பேசாமல் குறிப்பிட்ட
கால எல்லைக்குள் பேசி முடித்தல் அவசியம். இக்கருத்தை எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்றும்
கூறலாம். மக்கள் மனதில் உரையின் தொடக்கம், வளர்ச்சி, மற்றும்முடிவு பசுமரத்தாணி போல
பதிய வைத்தல் அவசியம்.
அடுத்து, உரையின் உணர்ச்சி இருத்தல் அவசியம்.
அதாவது செய்தி வாசிப்பது போல உரையை பேசுதல் கூடாது. உரையை பேசும் போது, அது கேட்போரின்
கவனத்தை ஈர்க்க செய்யுமாறு அமைய வேண்டும். மனதில் ஒன்றை வைத்து கொண்டு வெளியே ஒன்று
பேசுதல் கூடாது. உணர்ச்சி எப்போது தோன்றும் ? உணர்ச்சி, பேச்சாளர்கள் முன் வைக்கும்
கருத்து உண்மையாகவும், ஆணித்தரமாகவும் இருந்தால் உணர்ச்சி தானகவே பிறக்கும். அதாவது,
உண்மையை உணர்ந்து பேச வேண்டும். உண்மையும், அனுபவமே உணர்ச்சியை வெளிகொணர செய்கிறது.
கருத்து
தெளிவும், கருத்து கோர்வையும் ஓர் உரைக்கு அவசியம். சொல்லும் கருத்துகளும் தெளிவாக
அழகான சொற்களில் தர்க்க முறைக்கு மாறுபடாது. எடுத்துக்காட்டுகளோடு பேச வேண்டும். ஒரு
முதன்மை கருத்தைத் கொடுத்துவிட்டு பின் அதற்கேற்ற கருத்தின் விரிவாக்கம் தேவை. கருத்தை
விரிவாக்கம் செய்யும் போது ஆதாரங்கள் மற்றும் மேற்கொளையும் தரலாம். எடுத்துக்காட்டு,
இலக்கியம் சார்ந்தும், நடைமுறையையும் சார்ந்து இருக்கும் எடுத்துக்காட்டை பேச்சாளர்
தனது விருப்பத்திற்குப் பேச இயலாது. ஒரு பேச்சாளருக்கு ஆழ்ந்த நூலறிவும், அனுபவ அறிவும்
இருந்தால் மட்டுமே கருத்தைப் பற்றி தெளிவாக பேச இயலும். மேலும், சொல்லும் கருத்துக்குத்
தரும் ஆதாரங்கள், மேற்கொள்கள் மற்றும் எடுத்துக்காட்டுகள் கோர்வையாக அமைதல் அவசியம்.
தொடர்ந்து, உரையில் சரியான குரல் வளம் அவசியம்.
உரையாளர் பேசும் போது பேச்சில் ஏற்றம் இறக்கத்தப் பார்த்து கொள்ள வேண்டும். அவையில்
உரையாளர்கள் தன்னம்பிக்கையுடன் பேச வேண்டும். குரல்வளம் என்பது தொனியை சார்ந்தது. தொனியை
பேசும் இடத்திற்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக உணர்ச்சிமிக்கக் கருத்தைப்
பேசும் போது இறக்க தொனி போன்றவற்றைப் பயன்படுத்தினால் உரை கேட்பதற்கு இனிமையாக அமையும்.
மேலும், சபையில் பேசும் போது சரளமாக பேசுதல்
என்பது உரையின் முக்கிய கூறுகளில் ஒன்றாகும். அவையினர் முன் உரையாளர் நின்ற பிறகு தடுமாற்றம்
கூடாது. தடுமாற்றம் அடைந்தால் மக்களுக்கு உரையின் மீது சளிப்பு உண்டாக வாய்ப்புண்டு.
மனனமாக சொல்ல வேண்டிய கருத்தை மட மடவென பேச வேண்டும். உரையை பேச வேண்டும் என்றால் இலக்கிய
அறிவு மற்றும் பொது அறிவு இவ்விரண்டும் பேச்சாளர்களுக்கு இருத்தல் உரையின் கட்டாயத்தில்
ஒன்று.
உரையின் தன்மைகளில் மொழியும் ஒரு முக்கியக் கூறாக
அமைகிறது. உரையில் பயன்படுத்தும் சொற்களானது எளிமையாகவும் அவையினருக்குப் புரியும்
வண்ணமாகவும் அமைய வேண்டும். புரியாத சொற்களைப் பேச்சாளர்கள் பயன்படுத்தினால் மக்களுக்குப்
புரியாது, புரியாத பட்ஷத்தில் அவர்கள் அச்சொலுக்கு பொருள் தேடி அலைய இயலாது. எனவே,
எளிமையான சொற்களை உரையில் பயன்படுத்துவது சாலச் சிறந்தது.
அடுத்த கருத்தானது, உச்சரிப்பு. பொதுவாக உச்சரிப்பு
என்பதில் சொற்பிழை உண்டாகும். ‘ல, ள, ழ – கரம், ண, ன, ந-கரம் போன்ற எழுத்துகள் கொண்ட
சொற்களைப் பேச்சாளர்கள் தவறாக உச்சரித்தால் பொருட்பிழை உண்டாகும். பொருள் தவறாக புரிந்து
கொண்டால், தவறான கருத்து வருவதற்கு வாய்ப்புண்டு. எனவே, பொருளுர்ந்து சொற்களைப் பயன்படுத்த
வேண்டும். அப்படி பயன்படுத்தினால் சொல் உச்சரிப்பு சரியாக அமையும். மக்களுக்கும் வெறுப்பு
உண்டாகாமல், கருத்து சரியாகவும் அத்மாதமாகவும் சென்றடையும் என்பது திண்ணம்.
இறுதியாக, பாவனை. உரையாளர்கள் பேசும் போது அதற்கான
முக பாவனை, செய்கை போன்றவற்றை கையாண்டால் அவையினரின் கவனத்தை ஈர்க்கும். உரையை தொடர்ந்து
கேட்டு கொண்டிருக்க வேண்டும் என்ற ஆர்வமும் தூண்டும்.
சுருங்ககூறின், இவ்வணைத்து தன்மைகளே ஒரு சிறந்த உரையின் தன்மைகளாகும். இவ்வணைத்தும் ஒரு பேச்சாளரிடம் இருந்தால் அவர் சிறந்த உரையாளர் ஆவது திண்ணம்.
உடனடிப் பேச்சு தன்மைகள் எதாவது உண்டா?
ReplyDelete